தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பெண்கள் உள்பட 80 பேர் கைது


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பெண்கள் உள்பட 80 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2020 8:53 AM IST (Updated: 15 Dec 2020 8:53 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட தலைவர் மல்லையன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், நகர செயலாளர் வஜ்ரவேல், அகில இந்திய விவசாயிகள் இயக்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைசாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா, பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகி ரங்கநாயகி, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

80 பேர் கைது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளை பொருள் வியாபாரம், வர்த்தகம் ஊக்குவிப்பு மற்றும் விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளதால் அவற்றை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story