18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சண்முகம் வலியுறுத்தல்


18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சண்முகம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Dec 2020 9:37 AM IST (Updated: 30 Dec 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

18 வயது நிரம்பியவர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சண்முகம் வலியுறுத்தி உளளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் தஞ்சை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் தலைமையில் கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் வாக்காளர் பட்டியில் சுருக்க முறை திருத்தம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பார்வையாளர் சண்முகம் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்திலுள்ள வாக்காளர் பட்டியல் அலுவலர்கள், உதவி வாக்காளர் பட்டியல் அலுவலர்கள், களப்பணியாளர்கள் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு சுருக்கமுறை குறித்து கூடுதலாக மேலாய்வு செய்ய வேண்டும். இறப்பு குறித்து பதிவேற்றம் செய்யப்படும் விவரங்களை முழுமையாக ஆய்வு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கு அதிகளவில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தனி கவனம் செலுத்தி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான படிவங்களை வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வாக்காளர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சேர்க்க வேண்டும்

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு மனு அளிப்பின், அவர்கள் முன்பு சேர்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்தபின் அவர்களுடைய மனுவை பரிசீலிக்க வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களை விடுபடாமல் சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலசந்தர், வருவாய் கோட்ட அலுவலர்கள் வேலுமணி (தஞ்சை), விஜயன் (கும்பகோணம்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவையாறில் ஆய்வு

முன்னதாக, வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் சிறப்பு சுருக்க திருத்த முறை முகாமின்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து திருவையாறு விளாங்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் குறித்து களப்பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

Next Story