சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் தி.மு.க.வினருக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்


சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் தி.மு.க.வினருக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Jan 2021 9:09 PM GMT (Updated: 21 Jan 2021 9:09 PM GMT)

சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் என்று தி.மு.க.வினரிடம் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.

தூத்துக்குடி,

தமிழகத்தில் தி.மு.க. சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பிரசார பயணம் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் பிரசார பயணம் நேற்று நடந்தது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பாக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கனிமொழி எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

களத்தில் சந்திக்கும் எதிரிகள்

வரக்கூடிய தேர்தல் வழக்கமாக நாம் சந்திக்கும் தேர்தல் இல்லை. இந்த தேர்தலுக்கும், மற்ற தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மிகப்பெரிய ஆளுமையாக இருந்த தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நம்மோடு இல்லை. அதனை தாண்டி நம்மை எதிர்க்கக்கூடிய சக்திகள், அது கட்சியாக இருக்கிறதா, உடையப்போகிறதா, அ.தி.மு.க. எந்த நிலையில் தேர்தலை சந்திக்கப்போகிறது என்ற கேள்விகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கிறது. மறுபக்கம் தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு இணையான தலைவரே இல்லை என்ற நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உள்ளார்.

ஆனாலும் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் அ.தி.மு.க. மட்டும் இல்லை. நம்முடைய கொள்கைகள், பண்பாடு, நம்முடைய அடிப்படை விஷயங்களை உடைத்துவிட வேண்டும் என்ற நிலையில் உள்ள பா.ஜனதாவையும் சந்திக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.

வளர்ச்சி இல்லை

இடஒதுக்கீடு, சமூகநீதி, தமிழ் உணர்வு, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், மாணவர்களின் கல்வி போன்ற அடிப்படை விஷயங்களை கூட அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா. நம்முடைய மாநில உரிமைகள் இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள். அவர்களுக்கு துணையாக இருப்பது அ.தி.மு.க.

தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை. அனைத்திலும் ஊழல் நடக்கிறது. எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வழி இல்லாத நிலையில், வெற்றிநடை போடுகிறோம் என்கிறார்கள். ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தை மத்தியில் இருக்கக்கூடியவர்களிடம் அடகு வைத்து இருக்கிறார்கள். சாதி, மத பிரிவினைகள் தமிழகத்தில் வந்து விடக்கூடாது. இந்த பிரிவினைகள் வந்து விட்டால் வளர்ச்சி இருக்காது.

ஆகையால் இந்த தேர்தலில் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கடமை உணர்வோடு தேர்தலை சந்திக்க வேண்டும். இந்த தடவை யாரெல்லாம் வெற்றி பெறக்கூடாது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கு தமிழ்நாட்டில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

நமக்கு எதிராக இருப்பவர்கள் நேரில் வந்து மோத மாட்டார்கள். ஆனால் சூழ்ச்சி செய்வார்கள். வாக்காளர் பட்டியலில் இருந்து நமக்கு வேண்டிய வாக்காளர்களின் பெயர்களை நீக்குவார்கள். அவர்கள் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இதனை புரிந்து கொண்டு, விழிப்போடு இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும். மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.

முறியடிக்க வேண்டும்

இந்த தேர்தலில் பொய் பிரசாரங்கள் அதிகமாக வரலாம். அதனை முறியடிக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும். பொய் பிரசாரங்களுக்கு முடிந்தவரை பதில் அளிக்க வேண்டும். இதையெல்லாம் தேர்தல் முடியும் வரை, இது ஒரு போர்க்களம் என்பதை புரிந்து கொண்டு, தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நிச்சயமாக தி.மு.க.வுக்கே வெற்றி என்ற உறுதியோடு, நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். தமிழகத்தை மறுபடியும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மேல ஆத்தூரை சேர்ந்த இந்திரா, கோவில்பட்டியை சேர்ந்த பழனி ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அம்பேத்கர்நகர், லெவிஞ்சிபுரம், ராஜகோபால்நகர் ஆகிய பகுதிகளில் நடந்த மருத்துவ முகாமை அவர் தொடங்கி வைத்தார். இதில் அந்த பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

பாரதியார் சிலைக்கு மாலை

எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது மார்பளவு சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதியாரின் இல்லத்தை சுற்றி பார்வையிட்டார்.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சவுந்திரராஜன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதிகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story