பெற்ற ஆசிரியர் தம்பதி வீட்டின் கதவை உடைத்து 28 பவுன் நகைகள், 600 கிராம் வெள்ளி கொள்ளை


பெற்ற ஆசிரியர் தம்பதி வீட்டின் கதவை உடைத்து 28 பவுன் நகைகள், 600 கிராம் வெள்ளி கொள்ளை
x
தினத்தந்தி 24 Jan 2021 2:21 AM GMT (Updated: 24 Jan 2021 2:21 AM GMT)

மயிலாடுதுறை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி வீட்டின் கதவை உடைத்து 28 பவுன் நகைகள், 600 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 65). இவரது மனைவி மல்லிகா(62). ஓய்வு பெற்ற ஆசிரியர்களான இவர்கள் இருவரும் இரண்டு அடுக்கு மாடி வீட்டில் வசித்து வருகின்றனர்.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன் வித்யாசாகரின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக ராமதாஸ் தனது மனைவியுடன் கடந்த 21-ந்் தேதி சென்னை சென்றார்.

வாசல் முன்பு கிடந்த நகை பெட்டிகள்

நேற்று காலையில் இவரது வீட்டில் வேலை செய்யும் ஆசைரோஜா என்ற பெண் ராமதாசின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை பெட்டிகள் வாசல் கதவு முன்பு கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து சென்னையில் இருந்த ராமதாசுக்கும், போலீசாருக்கும் ஆசைரோஜா தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

28 பவுன் தங்கம்-வெள்ளி நகைகள் கொள்ளை

தகவலின் பேரில் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை வீடு திரும்பினா். பின்னர் வீட்டில் வைத்து இருந்த நகைகளை தேடி பார்த்தனர். பெரும்பாலான நகைகள் வெவ்வேறு இடங்களில் வைத்துச் சென்றதால் அந்த நகைகள் திருட்டு போகவில்லை. ஆனால் பீரோவில் இருந்த தங்க சங்கிலிகள்,, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட 28 பவுன் நகைகளும், 600 கிராம் வெள்ளி நகைகளும், ரூ 20 ஆயிரம் ரொக்கமும் காணாமல் போனதாக ராமதாஸ் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பரபரப்பு

மயிலாடுதுறை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story