அமைந்தகரையில் பட்டப்பகலில் துணிகரம்; வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை
அமைந்தகரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் என்ஜினீயர் மற்றும் அவரது தாயை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் தாய் பலியானார். படுகாயம் அடைந்த பெண் என்ஜினீயர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாய்-மகளுக்கு அரிவாள் வெட்டு
சென்னை அமைந்தகரை, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 48). கார் டிரைவர். இவருடைய மனைவி ஜெயந்தி (44). இவர்களுடைய மகள் மோனிகா (23). என்ஜினீயரான இவர், சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை கமலக்கண்ணன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகள் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது மர்மநபர்கள் 2 பேர், மாடியில் உள்ள கமலக்கண்ணன் வீட்டுக்குள் புகுந்து ஜெயந்தி மற்றும் அவருடைய மகள் மோனிகா இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
இதில் பலத்த வெட்டு காயமடைந்த ஜெயந்தி, சமையல் அறையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். மோனிகா, படுகாயங்களுடன் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது அரிவாளோடு மர்மநபர்கள் 2 பேர் மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர், மர்மநபர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் மர்மநபர்கள் இருவரும் பொதுமக்களிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.
தாய் பலி
இதையடுத்து வீட்டில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஜெயந்தி மற்றும் மோனிகா இருவரையும் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய மகள் மோனிகா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தப்பி ஓடிய மர்மநபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு காரணம் ஒருதலை காதல் விவகாரமா? அல்லது முன் பகை காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அமைந்தகரையில்பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story