ஊத்துக்கோட்டை அருகே 6 வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு; 5 கிராம மக்கள் தர்ணா
ஊத்துக்கோட்டை அருகே 6 வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 கிராம மக்கள், விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் 6 வழி சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலை தச்சூர் கூட்டு சாலை, கண்ணிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பருத்திமேனிகுப்பம், தொழவெடு, பனப்பாக்கம், சென்னங்காரனை, பாலவாக்கம், பேரண்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.
இந்த சாலை அமைத்தால் 500 ஏக்கர் விளைநிலங்கள், பல வீடுகள், கோவில்கள், அரசு பள்ளி கட்டிடங்கள் பாதிப்படையும். குறிப்பாக தொழவேடு, சென்னங்காரனை, பணப்பாக்கம், பேரண்டூர், போந்தவாக்கம் போன்ற பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலம் பாதிப்படையும்.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் மேற்கூறப்பட்ட 5 கிராம மக்கள், விவசாயிகள் 6 வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னகாரனையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை தாலுகா விவசாயிகள் சங்க உறுப்பினர் ராமதாஸ் இதற்கு தலைமை தாங்கினார்.
வேண்டாம், வேண்டாம் 6 வழி சாலை எங்கள் கிராமங்கள் வழியாக வேண்டாம். மாற்று வழியில் 6 வழி சாலை அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்த 6 வழி சாலை திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று உறுதி கூறும் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என்று அறிவித்தனர்.
Related Tags :
Next Story