திருச்சி கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம்


திருச்சி கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 31 March 2021 4:47 AM GMT (Updated: 31 March 2021 4:47 AM GMT)

திருச்சி கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் நலச்சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு.

மலைக்கோட்டை, 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி என்.நடராஜனுக்கு தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை காந்தி மார்க்கெட், பாலக்கரை, ஏர்போர்ட் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கடந்த 2 வாரங்களாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில், நேற்று காலை வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கரத்தினகுமார், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, சோழிய வெள்ளாளர் நலச்சங்க துணைச்செயலாளர் பொன்மலை பாலு பிள்ளை, புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் டைமண்ட் பாலு பிள்ளை, எஸ்.கே.டி.பாண்டியன், வ.உ.சி. இளைஞரணி கண்ணன் உள்ளிட்ட சோழிய வெள்ளாளர் சங்க முக்கிய நிர்வாகிகள் சந்தித்து, திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் உள்ள கோவில் பிரச்சனை குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி என்.நடராஜனை சந்தித்து கூறினார்கள். அதை, உடனே சரி செய்கிறேன் என்று அவர் உறுதி அளித்தார்.

இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெல்லமண்டி நடராஜனுக்கு, தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் நலச்சங்கம், வெள்ளாளர் முன்னேற்ற கழகம், திருச்சி மாவட்ட வ.உ.சி. பேரவை, ஆறுநாட்டு வெள்ளாளர் சங்கம், கார்காத்தார் வெள்ளாளர் சங்கம், எஸ்.கே.டி. வினோதினி நினைவு கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் சார்பில் முழு ஆதரவு அளித்து தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருப்பதாக கூறினர். அப்போது எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Next Story