கொரோனா தாக்கத்தால் பயணிகள் வரத்து குறைவு சென்னை விமான நிலையத்தில் 42 விமானங்கள் ரத்து


கொரோனா தாக்கத்தால் பயணிகள் வரத்து குறைவு சென்னை விமான நிலையத்தில் 42 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 28 April 2021 4:44 AM GMT (Updated: 28 April 2021 4:44 AM GMT)

கொரோனா தாக்கம் காரணமாக போதிய பயணிகள் இல்லாததால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆலந்தூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை புறநகா் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதன் பயனாக சென்னை விமான பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சென்னை உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ், வெளிமாநில பயணிகளுக்கு கட்டாய இ-பாஸ் முறை போன்றவைகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சென்னை மற்றும் புறநகரில் வேகமாக பரவும் கொரோனா பீதியால் சென்னைக்கு வரும் விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

முழு ஊரடங்கு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை 4 ஆயிரமாகவும், சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் என 9 ஆயிரமாக இருந்தது.

42 விமானங்கள் ரத்து

இந்த நிலையில், நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகள் எண்ணிக்கை 3 ஆயிரமாகவும், புறப்பாடு பயணிகள் 4 ஆயிரமாகவும் என 7 ஆயிரமாக வெகுவாக குறைந்து உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நேற்று போதிய பயணிகள் இல்லாமல் மும்பை, டெல்லி, ஐதராபாத், ஆமதாபாத், கொச்சி, இந்தூா், அந்தமான், புவனேஸ்வா், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 42 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதில் 21 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல கூடியது. 21 விமானங்கள் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டியவை ஆகும். மேலும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 83 வருகை விமானங்களும் 79 புறப்பாடு விமானங்களும் என 162 விமான சேவைகள் போதிய பயணிகள் இன்றி காலியாகவே இயக்கப்பட்டன.

Related Tags :
Next Story