அகில இந்திய அளவில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


அகில இந்திய அளவில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 28 Aug 2021 8:44 AM GMT (Updated: 28 Aug 2021 8:44 AM GMT)

அகில இந்திய அளவில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியதில் பிற பெருநகரங்களைவிட சென்னை மாநகராட்சி முதலிடத்தில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிறப்பு முகாம்
பள்ளிகள் 4 மாதங்களுக்கு பிறகு வருகிற 1-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்படும்போது ஆசிரியர்கள், பணியாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது.அதை பூர்த்தி செய்யும்வகையில் தடுப்பூசி செலுத்தாத அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான சிறப்பு முகாம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.இந்த சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர். 


அதையடுத்து மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி முதலிடம்
தமிழ்நாட்டில் தற்போதுவரை 3 கோடியே 1 லட்சத்து 75 ஆயிரத்து 410 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 14 லட்சத்து 74 ஆயிரத்து 439 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் மட்டும் 5 லட்சத்து 78 ஆயிரத்து 908 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 26-ந் தேதியன்று (நேற்று முன்தினம்) 200 வார்டுகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி 1 லட்சத்து 39 ஆயிரத்து 865 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகளை செலுத்தியதில் பிற பெருநகரங்களைவிட சென்னை மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது.

90 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகள்
தற்பொழுது பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் மொத்தமுள்ள ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேருக்கும், இதரப் பணியாளர்களில் 89.32 சதவீதம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில் ஆசிரியர்கள் மட்டுமன்றி, ஆசிரியர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கும், இதரப் பணியாளர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசின் முதன்மைச் செயலாளர்கள் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், காகர்லா உஷா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story