குடியரசு தினவிழாவில் 596 பேருக்கு பாராட்டு சான்று


குடியரசு தினவிழாவில் 596 பேருக்கு பாராட்டு சான்று
x
தினத்தந்தி 26 Jan 2022 5:59 PM GMT (Updated: 26 Jan 2022 5:59 PM GMT)

திண்டுக்கல்லில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலெக்டர் விசாகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து 596 பேருக்கு பாராட்டு சான்று வழங்கினார்.

திண்டுக்கல்: 


குடியரசு தினவிழா
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெள்ளை புறாக்கள், மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.

இதையடுத்து திறந்த ஜீப்பில் சென்றபடி ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படை, என்.சி.சி. அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார். மேலும் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 68 பேருக்கு கலெக்டர் பதக்கம் அணிவித்தார்.

596 பேருக்கு பாராட்டு சான்று 
அதோடு அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார். இந்த விழாவில் மொத்தம் 596 பேருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீட்டுக்கு கலெக்டர் நேரில் சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார். விழாவில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நீதிமன்றம்-அரசு போக்குவரத்து கழகம்
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட நீதிபதி ஜமுனா தேசியக்கொடியை ஏற்றினார். இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், மக்கள் நீதிமன்ற நீதிபதி புவனேஸ்வரி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், துணை மேலாளர் பாலசுப்பிரமணியன் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் டீசல் சிக்கனத்தை சிறப்பாக கடைபிடித்த 15 டிரைவர்கள், அதிக வருவாய் ஈட்டிய 15 கண்டக்டர்கள் உள்பட 32 பேருக்கு பரிசு. பாராட்டு சான்று வழங்கினார். இதில் துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி அலுவலகம்
இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கமிஷனர் சிவசுப்பிரமணியன் தேசியக்கொடியை ஏற்றினார். முன்னதாக குமரன் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் மேலாளர் கோவிந்தராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் லட்சுமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story