திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மந்த கதியில் நடந்து வரும் சுரங்கப்பாதை பணி


திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மந்த கதியில் நடந்து வரும் சுரங்கப்பாதை பணி
x
தினத்தந்தி 27 Jan 2022 2:54 PM GMT (Updated: 27 Jan 2022 2:54 PM GMT)

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நடந்து வரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது.

சுரங்கப்பாதை

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை, அரக்கோணம், திருத்தணி போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்லக்கூடியவர்கள், கூலித்தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரெயில் மூலம் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை இல்லாததால் அவ்வப்போது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வந்தது. இதனை போக்க திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் ரெயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி ெதாடங்கப்பட்டது. இந்த பணி மந்த கதியில் நடந்து வருகிறது.

கோரிக்கை

புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதையில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர ஏதுவாக சாய்வு தளம் அமைத்து தரப்படவில்லை. குறிப்பாக இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் செல்ல முறையான வடிகால் வசதி அமைக்கப்படாததால் தற்போது பெய்த மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் குளம் போல் காட்சி அளிக்கிறது.

தற்போது இந்த நீரில் பாசிகள் படர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ளது இதனை ரெயில்வே நிர்வாகத்தினர் கண்டும் காணாமல் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக மந்தகதியில் பணிகள் நடைபெற்று வருவதால் பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து வருகிறார்கள். எனவே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story