விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட மக்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட மக்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 28 Jan 2022 4:44 PM GMT (Updated: 28 Jan 2022 4:44 PM GMT)

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் மீது பாதிக்கப்பட்ட மக்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனா்.


விழுப்புரம், 

விழுப்புரம் சாலாமேடு, ராகவன்பேட்டை, பூந்தோட்டம், செஞ்சி அருகே வெள்ளையாம்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் மின்வாரிய துறை உள்ளிட்ட அரசின் பிற துறைகளில் வேலை வாங்கித்தருமாறு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகியான விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த ஒருவரை அணுகினோம். 

அதற்கு அவர், அரசு வேலை வாங்கித்தருவதாகவும் அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறினார். இதை நம்பிய நாங்கள் ஒவ்வொருவரும் அவரிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கொடுத்தோம். 

அந்த வகையில் 20 பேரிடம் சுமார் ரூ.70 லட்சம் வரை பெற்றார். பணத்தைபெற்றுக்கொண்டும் அவர்  அரசு வேலை ஏதும் வாங்கித்தரவில்லை.  இதையடுத்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டோம். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல், எங்களை மிரட்டினார்.

 இதேபோன்று அவர் பலரிடம் தீபாவளி சீட்டு நடத்தியும் பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். 

 மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story