பள்ளிக்கரணையில் சாலையை சுத்தம் செய்யும் வாகனம் மீது குப்பை லாரி மோதல்; டிரைவர் பலி


பள்ளிக்கரணையில் சாலையை சுத்தம் செய்யும் வாகனம் மீது குப்பை லாரி மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 31 Jan 2022 9:50 AM GMT (Updated: 31 Jan 2022 9:50 AM GMT)

பள்ளிக்கரணையில் சாலையை சுத்தம் செய்யும் வாகனம் மீது குப்பை லாரி மோதியது. இதில் குப்பை லாரி டிரைவர் பலியானார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

குப்பை லாரி மோதல்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று அதிகாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வாகனம் ஒன்று சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

அப்போது அதே சாலையில் வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி, அங்கு சாலையை சுத்தம் செய்து கொண்டு இருந்த வாகனத்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் அந்த வாகனத்தின் பின்புறம் நொறுங்கியது. மோதிய வேகத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு அந்த வாகனம் தள்ளப்பட்டது.

அத்துடன் சாலையை சுத்தம் செய்த வாகனத்தின் மீது மோதிய குப்பை லாரி, அதே வேகத்தில் சாலையின் இடதுபுறம் உள்ள சதுப்பு நிலத்துக்குள் பாய்ந்தது.

டிரைவர் பலி

இந்த விபத்தில் குப்பை லாரியின் டிரைவரான பெசன்ட் நகரைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 30), உதவியாளர்கள் ஆறுமுகம், கார்த்திக் மற்றும் சாலையை சுத்தம் செய்யும் வாகனத்தில் இருந்த வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (32), வெங்கடேஷ், மணிமாறன் ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாநகராட்சி மண்டல அதிகாரிகள் மற்றும் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 6 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குப்பை லாரி டிரைவர் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 5 பேரும் சிகிச்சை பெற்றனர்.

இதுபற்றி பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் இரு தரப்பிலும் புகாரை பெற்று விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சதுப்பு நிலததுக்குள் பாய்ந்த குப்பை லாரியை வெளியே எடுக்க ஒரு பக்க சாலை அடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story