ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டிற்கு வெளியே 144 தடை


ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டிற்கு வெளியே 144 தடை
x
தினத்தந்தி 30 Jan 2024 12:50 PM IST (Updated: 30 Jan 2024 1:44 PM IST)
t-max-icont-min-icon

அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராவார் என முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஜனவரி 16 முதல் 20-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு 20-ம் தேதி தனது வீட்டில் வைத்து தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தார்.

அதன்படி இன்று மதியம் முதல்-மந்திரியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்-மந்திரி மாளிகைக்கு வர உள்ளனர். இதையடுத்து முதல்வரின் இல்லத்தில் விசாரணை மேற்கொள்ளும்போது, பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் வலியுறுத்தி அமலாக்கத்துறை சார்பில், தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குனர் மற்றும் ராஞ்சி மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 20-ம் தேதி ஜார்க்கண்ட்டில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். எனினும், விசாரணை முழுமையாக முடியவில்லை என்று கூறி ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் 9-வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் 9-வது முறையாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியது.

அதன்படி, ஜனவரி 27-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் ஏதேனும் ஒருநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. இக்கடிதத்துக்கு ஹேமந்த் சோரன் தரப்பில் எந்தவித அதிகாரபூர்வ பதிலும் அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த 27-ம் தேதி ஹேமந்த் சோரன் ராஞ்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றதாகவும், விரைவில் அவர் ராஞ்சி திரும்புவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் அதிகாரபூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். ஆனால் வீட்டில் ஹேமந்த் சோரன் இல்லை என்றும் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை எனவும் தகவல் வெளியானது. மேலும் இந்த சோதனையின்போது அவரின் வீட்டில் இருந்து 36 லட்சம் பணம், அவரின் 2 பி.எம்.டபிள்யூ. காரை அமலாக்கத்துறை கைப்பற்றினர்.

'அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயந்து ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளதாக' ஜார்க்கண்ட் பா.ஜ.க. தலைவர் பாபுலால் மராண்டி கூறியுள்ளார்.

இதற்கிடையே முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமறைவாக இருப்பதாக பாஜக எழுப்பிய குற்றச்சாட்டுக்கு முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா பதிலளித்துள்ளார். அதில் அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராவாவர் என்றும் முதல்வர் தனிப்பட்ட வேலைகளுக்காக டெல்லி சென்றுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் பாஜக இவ்வாறு செயல்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், நாளை அமலாக்கத்துறை முன் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆஜராக உள்ளதால் ராஞ்சியில் உள்ள அவரது வீடு, கவர்னர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்பு கருதி 100 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story