மாநிலங்களவையில் பா.ஜனதாவின் பலம் உயர்கிறது


மாநிலங்களவையில் பா.ஜனதாவின் பலம் உயர்கிறது
x
தினத்தந்தி 25 Feb 2018 11:15 PM GMT (Updated: 25 Feb 2018 8:05 PM GMT)

மாநிலங்களவையில் 58 இடங்களுக்கு அடுத்த மாதம் (மார்ச்) நடைபெறும் தேர்தலை தொடர்ந்து அங்கு பா.ஜனதாவின் பலம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை உள்ள நிலையில், தனது கூட்டணி கட்சிகளுடன் அங்கு அசைக்க முடியாத சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி விளங்குகிறது. அதேநேரம் மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு குறைவான இடங்களே உள்ளன.

எனினும் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா, அதில் சில மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் மாநிலங்களவையில் காங்கிரசை (54 இடங்கள்) பின்னுக்கு தள்ளிவிட்டு 58 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக தற்போது விளங்கி வருகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேசம், மராட்டியம், பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 58 உறுப்பினர்களின் பதவிக்காலம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிறைவடைகிறது. இதில் பா.ஜனதாவின் தற்போதைய மத்திய மந்திரிகள் சிலரும் அடங்குவர்.

எனவே அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 23–ந்தேதி தேர்தல் நடக்கிறது. அத்துடன் கேரளாவில் இருந்து ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

மாநிலங்களவையின் மொத்த எண்ணிக்கையில் 22 சதவீத இடங்களுக்கு நடக்கும் இந்த தேர்தலுக்குப்பின் மாநிலங்களவையில் பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பலம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் உத்தரபிரதேசம், அரியானா, மராட்டியம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆட்சியில் உள்ளன.

இதன்மூலம் மார்ச் 23–ந்தேதிக்குப்பிறகு மாநிலங்களவையில் பா.ஜனதாவின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 68 வரை உயரும் என கருதப்படுகிறது. இதைப்போல அதன் கூட்டணி கட்சிகளும் கணிசமான தொகுதிகளை பெறுவதுடன், தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர் எண்ணிக்கையும் உயரும் நிலை உருவாகி உள்ளது.

எனினும் 245 உறுப்பினர் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த தேர்தலை தொடர்ந்து ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ஜனதா இன்னும் தேர்வு செய்யவில்லை. எனினும் தற்போது பதவி முடிவடையும் நிலையில் இருக்கும் மத்திய மந்திரிகள் அனைவரும் மீண்டும் போட்டியிடுவதுடன், கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிலரும் களமிறங்குவர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story