மேற்கு வங்காளத்தில் 4 நாட்களில் தூக்கில் தொங்கிய நிலையில் பா.ஜ.கவின் 2வது தொண்டர் கண்டெடுப்பு


மேற்கு வங்காளத்தில் 4 நாட்களில் தூக்கில் தொங்கிய நிலையில் பா.ஜ.கவின் 2வது தொண்டர் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 2 Jun 2018 10:54 AM GMT (Updated: 2 Jun 2018 10:54 AM GMT)

மேற்கு வங்காளத்தில் கடந்த 4 நாட்களில் பாரதீய ஜனதா கட்சியின் 2 தொண்டர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளனர்.

புருலியா,

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  அக்கட்சியின் எம்.பி.யான அபிசேக் பானர்ஜி, புருலியாவை எதிர்க்கட்சிகள் இல்லாத மாவட்டம் ஆக்குவேன் என சபதம் மேற்கொண்டார்.

இந்நிலையில், கடந்த மே 30ந்தேதி திரிலோசன் மஹதோ என்ற பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.  இதன் பின்னணி பற்றி தெரிவதற்கு முன் மற்றொரு பாரதீய ஜனதா தொண்டர் ஒருவர் டவர் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அவர் புருலியாவின் பலராம்பூர் நகரில் தபா கிராம பகுதியை சேர்ந்த 32 வயது துலால் குமார் என்பது தெரிய வந்துள்ளது.  நேற்றிரவில் இருந்து காணாமல் போன அவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டு உள்ளார்.  இந்த படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என பாரதீய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

எனினும் இதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.  இதுபற்றி அக்கட்சியை சேர்ந்த எம்.பி. தெரீக் ஓ. பிரையன் கூறும்பொழுது, இந்த கொடுஞ்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.  அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்.  குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.  விசாரணையில் உண்மை கண்டறியப்படும் என கூறியுள்ளார்.  தொடர்ந்து இதுபற்றி சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story