பிரணாப் முகர்ஜியின் அறிவுரையை ஆர்.எஸ்.எஸ்- பாஜக ஏற்குமா?காங்கிரஸ் கேள்வி


பிரணாப் முகர்ஜியின் அறிவுரையை ஆர்.எஸ்.எஸ்- பாஜக ஏற்குமா?காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 8 Jun 2018 1:22 AM GMT (Updated: 8 Jun 2018 1:22 AM GMT)

பிரணாப் முகர்ஜியின் அறிவுரையை ஆர்.எஸ்.எஸ்- பாஜக ஏற்குமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசும் போது,: “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.பல்வேறு இன, மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப்போய்விடும்.மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

காங்கிரஸ் கேள்வி

இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின்  அறிவூப்பூர்வமான அறிவுரைகளை ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆகியவை ஏற்குமா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.இதுகுறித்து டெல்லியில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்  ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: “ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேசியபோது, இந்தியாவின் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மைகளை நினைவுப்படுத்தினார். குறிப்பாக, அனைத்து வகையிலான வன்முறைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு, வேற்றுமையில் ஒற்றுமை, வன்முறையில்லாத சூழ்நிலை, பன்முக கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ராஜதர்மத்தை நினைவுப்படுத்தினார். மக்களின் மகிழ்ச்சிதான், ஆட்சியாளர்களின் மகிழ்ச்சி, அவர்களது நலன்தான், ஆட்சியாளர்களின் நலன் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

நாட்டின் தற்போதைய உண்மை நிலையை வெளிச்சம் போட்டு அவர் காட்டினார். அவரது அறிவுப்பூர்வமான அறிவுரைகளை ஏற்று, தனது நடத்தை, சித்தாந்தம் உள்ளிட்டவற்றை ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை மாற்றிக் கொள்ளுமா? பிரதமர் தனது பாதையை மாற்றிக் கொள்வாரா? இதற்கு பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் பதிலளிக்க வேண்டும். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story