பீகார்: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குளறுபடி


பீகார்: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குளறுபடி
x
தினத்தந்தி 9 Jun 2018 6:01 AM GMT (Updated: 9 Jun 2018 6:01 AM GMT)

பீகாரில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #Bihar #GeneralExam

பீகார்,

பீகார் பள்ளி தேர்வு வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது. அதில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலருக்கு தாங்கள் எழுதிய தேர்வின் மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

இந்த சம்பவம் குறித்து பீகாரில் அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த  மாணவர் பீம் குமார் கூறுகையில்,  “கணித பாடத்திற்கு மொத்த மதிப்பெண் 35. ஆனால் நான் 38 மதிப்பெண் பெற்றுள்ளதாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. காரணம் இது போன்று நீண்ட காலமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இதேபோல் கிழக்கு சாம்பரனிலிருந்து மாணவர் சந்தீப் ராஜ் கூறுகையில், ‘இயற்பியல் பாடத்திற்கு மொத்த மதிப்பெண் 35. நான் 38 மதிப்பெண் பெற்றுள்ளேன். இது எப்படி சாத்தியமாகும்’ என்று தெரிவித்தார். இதுபோல் தர்பாங்கா பகுதியைச் சேர்ந்த ராகுல்குமார் 35 மதிப்பெண்ணுக்கு எழுதிய கணித தேர்வில் அவருக்கு 40 மதிப்பெண்களை பீகார் மாநில பள்ளி தேர்வு வாரியம் வழங்கியுள்ளது.  

மேலும் தேர்வுக்கே வராத மாணவர்கள் சிலருக்கு கூட மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பள்ளி கல்வி வாரியத்தின் இந்த குளறுபடி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story