பழந்தின்னி வவ்வால்கள் நிபா வைரஸ் பரவ காரணம்; இந்திய மருத்துவ கவுன்சில் உறுதி


பழந்தின்னி வவ்வால்கள் நிபா வைரஸ் பரவ காரணம்; இந்திய மருத்துவ கவுன்சில் உறுதி
x
தினத்தந்தி 3 July 2018 4:24 PM GMT (Updated: 3 July 2018 4:24 PM GMT)

கேரளாவில் பழந்தின்னி வவ்வால்கள் வழியே நிபா வைரஸ் பரவியுள்ளது என இந்திய மருத்துவ கவுன்சில் உறுதி செய்துள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.  இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நர்சு உள்பட 17 பேர் பலியாகினர்.

இந்த வைரஸ் தாக்குதலை அடுத்து கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசக்கோளாறு போன்றவை ஏற்படும்.  இந்த வைரஸ் மூளையை தாக்குவதால், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு ஒரு சில நாட்களிலேயே மரணம் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு இன்னும் தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை. நோய் தாக்கியவருக்கு அடிப்படை சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. 

இந்த வைரஸ் பரவுவதற்கு பழந்தின்னி வவ்வால்களே அடிப்படை என கூறப்பட்டது.  இந்த நிலையில், வவ்வால்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில், நிபா வைரஸ் இவற்றால் பரவவில்லை என முதற்கட்ட பரிசோதனையில் தெரிய வந்தது.  ஆனால் பூச்சி உண்ணும் வவ்வால்களிடம் இருந்தே இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன என தகவலில் கூறப்பட்டது.

எனினும், மற்றொரு மருத்துவ குழு 55 பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து சேகரித்த மாதிரிகளை புனே நகரில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி ஆய்வு செய்தது.  இதில், அவற்றில் நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Next Story