நேபாளத்தில் இந்திய பக்தர்கள் தவிப்பு: பிரதமர் மோடி கவலை


நேபாளத்தில் இந்திய பக்தர்கள் தவிப்பு: பிரதமர் மோடி கவலை
x
தினத்தந்தி 3 July 2018 10:30 PM GMT (Updated: 3 July 2018 10:03 PM GMT)

கைலாய யாத்திரை சென்ற 1,500 இந்தியர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். இந்நிலையில் நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவலை கொண்டு உள்ளார். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் அவர் தொடர்பு கொண்டு இருக்கிறார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முடிந்தவரை அனைத்து வித உதவிகளை அளிக்குமாறும் அப்போது அவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களுக்கு உதவி செய்வதில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், நேபாளத் தலைநகர் காட்மாண்டு நகரில் உள்ள இந்திய தூதரகம் பக்தர்களை மீட்பதற்காக சிமிகோட் நகருக்கு அனுப்பிய விமானங்கள் தரையிறங்கி உள்ளன. மீட்பு நடவடிக்கை படிப்படியாக தீவிரப்படுத்தி வருகிறது என்றும் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்து உள்ளது.

Next Story