ஆளுநர் விவகாரம்: டெல்லியுடன் புதுச்சேரியை ஒப்பிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு விளக்கம்


ஆளுநர் விவகாரம்: டெல்லியுடன் புதுச்சேரியை ஒப்பிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு விளக்கம்
x
தினத்தந்தி 4 July 2018 4:42 PM GMT (Updated: 4 July 2018 4:42 PM GMT)

ஆளுநர் விவகாரத்தில் டெல்லியுடன் புதுச்சேரியை ஒப்பிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று விளக்கம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

யூனியன் பிரதேசமான டெல்லியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் உள்ளது. இருவருக்கும் இடையே யாருக்கு அதிக  அதிகாரம் என்பது தொடர்பான பிரச்சினை, நீதிமன்றம் வரை சென்றது. ஆம் ஆத்மி அரசு தரப்பில், இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பான ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.  டெல்லியில் நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது. ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை. அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம்; ஆனால் ஒப்புதல் அவசியமல்ல” என்று தீர்ப்பளித்தது.

இதனால் டெல்லி அரசும், துணை நிலை ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த தீர்ப்பினை வரவேற்ற புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, தெற்கு பகுதியிலுள்ள யூனியன் பிரதேசத்திற்கும் இது பொருந்தும் என கூறினார்.  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட தவறினால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இதுபற்றி கூறும்பொழுது, புதுச்சேரி 239ஏ என்ற பிரிவின் கீழ் வருகிறது.  டெல்லியானது 239ஏஏ என்ற பிரிவில் வருகிறது என கூறியுள்ளது.  இதனால் டெல்லியுடன் புதுச்சேரியை ஒப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

புதுச்சேரியானது யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி, லட்சத்தீவு மற்றும் சண்டிகார் ஆகியவற்றில் இருந்தும் வேறுபடுகிறது என 5 பேர் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.

Next Story