முதல் நாளிலே மோதல், உங்களுடைய அனுமதி தேவையில்லை ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்


முதல் நாளிலே மோதல், உங்களுடைய அனுமதி தேவையில்லை ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்
x
தினத்தந்தி 5 July 2018 12:25 PM GMT (Updated: 5 July 2018 12:25 PM GMT)

டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய முதல் நாளிலே மோதல் ஏற்பட்டுள்ளது. #ArvindKejriwal #LGAnil Baijal


புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு, டெல்லியில் துணை நிலை கவர்னருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரிசபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது.

 நிலம், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட 3 துறைகள் தவிர மற்ற அனைத்தின் மீதும் சட்டம் இயற்றி ஆட்சி செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதாக தெரிவித்தது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் டெல்லியில் மோதல் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்றே தெரிகிறது.

 டெல்லி அரசு அதிகாரிகளை இடமாற்றத்துக்கான ஒப்புதல் அளிப்பதற்கு முதல்–மந்திரிக்கே அதிகாரம் வழங்கி புதிய நடைமுறை ஒன்றை மாநில அரசு வெளியிட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு இணங்க மாட்டோம் என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். இதுதொடர்பாக  மணிஷ் சிசோடியா பேசுகையில், “அரசின் உத்தரவுகளை சேவைத்துறை பின்பற்றாது என தலைமை செயலாளர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த உத்தரவுக்கு அவர்கள் இணங்கவில்லை என்றாலோ, இடமாற்ற கோப்புகளை துணைநிலை ஆளுநரே தொடர்ந்து பார்வையிடுவார் என்றாலோ அது அரசியல் சாசன அமர்வை அவமதிக்கும் செயல் ஆகும்’ என்றார். 

 மணிஷ் துணைநிலை கவர்னருக்கு கொடுக்கப்பட்ட 3 துறைகளில் சேவைத்துறை இடம்பெறவில்லை என்று கூறிய மணிஷ் சிசோடியா, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அரசு அதிகாரிகளும், மத்திய அரசும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“சுப்ரீம் கோர்ட்டு துணை நிலை ஆளுநர் மற்றும் மாநில அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் பற்றி ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டது. ஆனால் இதை மதிக்காமல் அதிகாரிகளும், மத்திய அரசும் செயல்படுவது வேதனை அளிக்கிறது. டெல்லியில் அரசு நிர்வாகம் சுமூகமாக நடக்க மத்திய அரசும், துணைநிலை ஆளுநரும் முன் வரவேண்டும். உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்,” என குறிப்பிட்டார் மணிஷ் சிசோடியா.  

இதற்கிடையே அரசின் உத்தரவுகளை நிராகரித்துள்ள சேவைத்துறை, மாநிலத்தில் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்வதற்கு உள்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் இருப்பதாக கடந்த 2016–ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரிக்கவில்லை எனக் கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும், டெல்லியில் மீண்டும் அதிகாரம் தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கெஜ்ரிவால் கடிதம் 

இந்நிலையில் புதுடெல்லியில் ஆட்சி சுமுகமாக நடைபெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் 
அனில் பைஜாலை சந்தித்து பேச முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கோரியுள்ளார்.  

அனில் பைஜாலை கடிதம் எழுதியுள்ள கெஜ்ரிவால் “எந்த ஒரு விஷயத்திற்கும் துணை நிலை ஆளுநரின் அனுமதி தேவையில்லை,” என குறிப்பிட்டுள்ளார்.

 “சுப்ரீம் கோர்ட்டால் தீர்த்து வைக்கப்பட்ட இரண்டு குறிப்பிட்ட சிக்கல்கள் தொடர்பான குறிப்புகளை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன், எந்தஒரு விஷயத்திற்கும் துணை நிலை ஆளுநரின் அனுமதி தேவையில்லை, சேவைத்துறை தொடர்பான அதிகாரம் மாநில அமைச்சரவையிடமே உள்ளது,” என தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.

Next Story