மராட்டியத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை 15-ம் தேதி முதல் அமல்


மராட்டியத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை 15-ம் தேதி முதல் அமல்
x
தினத்தந்தி 6 July 2018 10:43 AM GMT (Updated: 6 July 2018 10:43 AM GMT)

மராட்டியத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் 15-ம் தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. #plasticban #YogiAdityanath

லக்னோ,

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு சமீபத்தில் மராட்டியத்தில் தடை விதிக்கப்பட்டது. தடை அமலுக்கு வந்தது முதல் தீவிரக்கண்காணிப்பும், விதி மீறல்களுக்கு தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில், உத்தர பிரதேசத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கும்படி அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் முழுமையாக இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில், மீண்டும் 2017ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. ஆனால், நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் புழக்கத்தையும், பயன்பாட்டையும் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாரபங்கியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்த தடை உத்தரவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில்,

மாநிலம் முழுவதும் வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களு தடை விதிக்கப்படுகிறது.  ஜூலை 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

 நமது இலக்கை எட்டுவதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தடை அமலுக்கு வந்தது முதல் தீவிரக்கண்காணிப்பும், விதி மீறல்களுக்கு தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே பல முக்கிய சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story