மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்கவில்லை துணை நிலை ஆளுநரை சந்தித்த கெஜ்ரிவால் பேட்டி


மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்கவில்லை துணை நிலை ஆளுநரை சந்தித்த கெஜ்ரிவால் பேட்டி
x
தினத்தந்தி 6 July 2018 12:17 PM GMT (Updated: 6 July 2018 12:17 PM GMT)

துணை நிலை ஆளுநரை சந்தித்து பேசிய கெஜ்ரிவால், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். #ArvindKejriwal


புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்தது முதலே மாநில அரசுக்கும், துணைநிலை கவர்னருக்கும் (மத்திய அரசு) இடையே அதிகாரப்போட்டி இருந்து வருகிறது. அங்கு துணைநிலை கவர்னருக்கே அதிக அதிகாரம் என கடந்த 2016–ம் ஆண்டு ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததால், இந்த விவகாரம் மேலும் சிக்கலுக்குள்ளானது. இருதரப்புக்கும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால் சுப்ரீம் கோர்ட்டை நாடினார், முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால். அவரது மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து நேற்றுமுன்தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதில் டெல்லியில் துணை நிலை கவர்னருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரிசபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது. நிலம், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட 3 துறைகள் தவிர மற்ற அனைத்தின் மீதும் சட்டம் இயற்றி ஆட்சி செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

இந்த தீர்ப்பை நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வரவேற்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும், ஆம் ஆத்மி கட்சியினரும் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டனர். ஆனால் இந்த தீர்ப்பால் டெல்லியில் இரு தரப்பு மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில், அரசு அதிகாரிகளை இடமாற்றத்துக்கான ஒப்புதல் அளிப்பதற்கு முதல்–மந்திரிக்கே அதிகாரம் வழங்கி புதிய நடைமுறை ஒன்றை மாநில அரசு வெளியிட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு இணங்க மாட்டோம் என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து துணை முதல்–மந்திரி மணிஷ் சிசோடியா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அரசின் உத்தரவுகளை சேவைத்துறை பின்பற்றாது என தலைமை செயலாளர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த உத்தரவுக்கு அவர்கள் இணங்கவில்லை என்றாலோ, இடமாற்ற கோப்புகளை துணைநிலை கவர்னரே தொடர்ந்து பார்வையிடுவார் என்றாலோ அது அரசியல் சாசன அமர்வை அவமதிக்கும் செயல் ஆகும்’ என்று தெரிவித்தார்.

துணைநிலை கவர்னருக்கு கொடுக்கப்பட்ட 3 துறைகளில் சேவைத்துறை இடம்பெறவில்லை என்று கூறிய மணிஷ் சிசோடியா, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அரசு அதிகாரிகளும், மத்திய அரசும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே அரசின் உத்தரவுகளை நிராகரித்துள்ள சேவைத்துறை, மாநிலத்தில் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்வதற்கு உள்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் இருப்பதாக கடந்த 2016–ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரிக்கவில்லை எனக் கூறியுள்ளது. இதன் மூலம் டெல்லியில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவாகி உள்ளது. மோதல் தொடரும் நிலையில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாவை முதல்-மந்திரி கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். 

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,  மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

“துணை நிலை ஆளுநர் அனில் பைஜாவை சந்தித்து பேசினேன். மாநிலத்தில் சேவைத்துறை தேர்வு செய்யப்பட்ட அரசின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். 2015-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் சேவைத்துறை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யவில்லை என்று கூறுகிறார். வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்க மறுக்கிறது. மத்திய அரசு சேவைத்துறை வைத்துள்ளது ஆனால் கல்வித்துறை இயக்குநரை நியமனம் செய்யவில்லை. காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் எங்களால் கல்வித்துறையில் எப்படி மாற்றங்களை கொண்டுவர முடியும்? சேவைத்துறை எங்களிடம் உள்ளது, நாங்கள் 15 நாட்களுக்குள் அதிகாரிகளை நியமனம் செய்வோம்,” என கூறியுள்ளார் கெஜ்ரிவால்.

Next Story