இறக்குமதி மணலுக்கான விலை குறித்து முடிவு செய்ய குழு அமைப்பு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்


இறக்குமதி மணலுக்கான விலை குறித்து முடிவு செய்ய குழு அமைப்பு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 9:36 PM GMT)

இறக்குமதி மணலுக்கான விலை குறித்து முடிவு செய்ய குழு அமைப்பட்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விலைக்கு வாங்க தயார் எனவும், இதற்கான விலை குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கும், ஏற்கனவே இறக்குமதி செய்த மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச்செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இதை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு அரசின் தடை உத்தரவை ரத்து செய்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

அத்துடன் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசு வாங்குவது குறித்தும், என்ன விலைக்கு வாங்க முடியும்? என்பது குறித்தும் 20 நாட்களில் உரிய ஆய்வு மேற்கொண்டு கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மே 16-ந்தேதி நீதிபதிகள் உத்தரவிட்டது. அதுவரை மணலை வைத்திருப்பதற்கான கட்டணத்தை துறைமுகத்துக்கு தமிழக அரசே கட்ட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இறக்குமதி மணலை வாங்க தமிழக அரசு தயார் என, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் இறக்குமதி மணலின் விலையை நிர்ணயம் செய்ய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், அக்குழு நாளை (புதன்கிழமை) கூடி முடிவெடுக்கும் என்றும் கூறிய வக்கீல்கள், அந்த குழுவின் முடிவை கோர்ட்டில் தாக்கல் செய்ய சிறிது அவகாசம் தேவை என்றும் வேண்டுகோள் விடுத்தனர். விலையை நிர்ணயம் செய்வது குறித்து நிறுவனத்துடன் நேரடியாக பேரம் பேசுவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் மணலுக்கான விலை நிர்ணயம் தொடர்பான விவகாரங்களில் கோர்ட்டு தலையிட முடியாது எனக்கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்குள் தமிழக அரசு தங்கள் முடிவை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Next Story