மும்பையில் கனமழை; மேற்கு ரெயில்வேயின் புறநகர் ரெயில் சேவை நிறுத்தி வைப்பு


மும்பையில் கனமழை; மேற்கு ரெயில்வேயின் புறநகர் ரெயில் சேவை நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 10 July 2018 3:52 AM GMT (Updated: 10 July 2018 3:52 AM GMT)

மும்பையில் கனமழையினால் புறநகர் ரெயில் சேவையை மேற்கு ரெயில்வே நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

மும்பை,

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.  பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மும்பையில் நேற்றிரவில் இருந்து 200 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது என பதிவாகி உள்ளது.  இதனால் ரெயில்வே தண்டவாளங்களில் நீர் சூழ்ந்துள்ளது.  பயணிகளின் பாதுகாப்பினை கவனத்தில் கொண்டு, தண்டவாளங்களில் இருந்து நீர் வடியும் வரை ரெயில் சேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்து உள்ளோம்.  நீரை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மேற்கு ரெயில்வே நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதேபோன்று நகர் முழுவதும் நீர் தேங்கிய நிலையில், மும்பை டப்பாவாலாக்கள் தங்களது பணிகளை இன்று நிறுத்தி வைத்துள்ளனர்.

மும்பையில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையிலும் மத்திய ரெயில்வே நிர்வாகம் புறநகர் ரெயில் சேவையை வழக்கம்போல் இயக்கி வருகிறது.


Next Story