காங்கிரசுடன் கூட்டணி வைப்பது பற்றி கமல்ஹாசன் கருத்து: “எதுவும் சாத்தியம்” என்று சூசகம்


காங்கிரசுடன் கூட்டணி வைப்பது பற்றி கமல்ஹாசன் கருத்து: “எதுவும் சாத்தியம்” என்று சூசகம்
x
தினத்தந்தி 2 Aug 2018 12:30 AM GMT (Updated: 1 Aug 2018 8:54 PM GMT)

காங்கிரசுடன் கூட்டணி வைப்பது பற்றி நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவிக்கையில் எதுவும் சாத்தியம் என்று சூசகமாக பதில் அளித்தார்.

மும்பை, 

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக மும்பை சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: அண்மையில் நீங்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினீர்கள். அப்படியென்றால் அவர்களுடன் தேர்தலில் கூட்டணி அமைப்பீர்களா?

பதில்: எதுவும் சாத்தியம்தான். தமிழ்நாட்டுக்கு எது சரியானது, தமிழகத்துக்கு யாரால் நல்லது செய்ய இயலும் என்பதை கண்டறியவேண்டும். மாநிலத்தை சீரழித்தவர்கள் யார்?... வெளியே போகவேண்டியவர்கள் யார்?... என்பது தெரியவேண்டும்.

எனக்கு உதவியவர்களுக்கு நான் ஏதாவது செய்தாகவேண்டும். இதற்கு நேர்மையுடன் பதில் அளிக்கவேண்டும் என்றால் எனது கூட்டணிகளை நான் அறிவேன்.

கேள்வி: நீங்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பா.ஜனதாவின் பக்கம் சாயப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதே?...

பதில்: எனது அணுகுமுறையும், தத்துவமும் மிகத் தெளிவானது. சரியான சந்தர்ப்பத்தில் அரசியலுக்கு வந்திருப்பதால் நான் ஒரு சந்தர்ப்பவாதி அல்ல. அது என்னை சந்தர்ப்பவாதியாகவும் உருவாக்கி விடாது.

எனக்கென்று ஒரு குறிக்கோள் உள்ளது. அதை எனது திறமைக்கேற்ப வெளிப்படுத்துவேன். எனது லட்சியம், இந்தியா தனது பன்முகத் தன்மையை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருக்கவேண்டும் என்பதுதான்.

கேள்வி: திரையுலகைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசியலில் தொடர்ந்து குதித்து வருகிறார்களே?...

பதில்: என்னைப் பொறுத்தவரை இதுவரை உள்ள தமிழகத்தின் நிலைமையை மாற்றவேண்டும், தேக்கத்தையும் ஊழலையும் அகற்றவேண்டும் என்கிற சவாலுக்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்திட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கடமை ஆகும். சினிமாவின் அடுத்தகட்ட பயணமாக நான் அரசியலை பார்க்கவில்லை. ஆனால், இதில் சில அத்தியாவசியங்கள் இருக்கின்றன.

இதைச் செய்யாவிட்டால் நிச்சயம் நான் மகிழ்ச்சியான மனிதனாகவே சாக முடியாது. ஏனென்றால் இது வாழ்க்கையை வெறுமனே அமைத்துக் கொள்வது மட்டுமே அல்ல. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்ளவும் வேண்டும் என்கிற அர்த்தத்தை உணர்த்துவதாகும். அந்த வகையில் இதுவரை அப்படியே வாழ்ந்து வருகிறேன்.

மக்கள் எனக்கு மிக முக்கியம். என்னை 63 ஆண்டுகளாக சந்தோஷமாக வைத்திருக்கும் இந்த சமூகத்துக்கு பணியாற்றுவது எனது கடமை. ஏனென்றால் எனது புகழின்போது, இக்கட்டான தருணங்களிலும் அவர்கள்தான் எனக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

நடிப்பில் என்னையும், ரஜினிகாந்தையும் ஒப்பிடுவது சரியல்ல. நானும், அவரும் இதில் வெவ்வேறானவர்கள்.

கேள்வி: உங்களுடைய கனவு?

பதில்: லோக் ஆயுக்தா அமைவது. அது அரசியல்வாதிகளை பதில் சொல்ல வைக்கும்.

கேள்வி: நாட்டில் பெண்களின் பாதுகாப்பு பற்றி?...

பதில்: நம்மால் சுட்டுக்கொல்லப்பட்டவர் (மகாத்மா காந்தி), என்றைக்கு ஒரு பெண் ஆபரணங்களை அணிந்து கொண்டு நடு இரவில் தன்னந்தனியாக வீடு திரும்புகிறாரோ, அந்த நாள்தான் உண்மையான சுதந்திர இந்தியாவாக இருக்கும் என்று கூறினார். நாடு சுதந்திரமடைந்து 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் இன்னும் இதைச் செய்யவில்லை. ஆனால் சுதந்திரம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். எனவே இன்றிலிருந்தே அதைத் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story