டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் பாதுகாப்பு படையினர் உஷார்


டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்  பாதுகாப்பு படையினர் உஷார்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:30 PM GMT (Updated: 5 Aug 2018 10:13 PM GMT)

டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள்

நாட்டின் சுதந்திர தினம் வருகிற 15–ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அத்துடன் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்.

இந்த விழாவின் போது டெல்லியில் மிகப்பெரும் தாக்குதலை அரங்கேற்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. அந்த நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவுடன் இந்த தாக்குதலை அரங்கேற்றுவதற்காக பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை கூறி உள்ளது.

காஷ்மீர் வழியாக ஊடுருவல்

அதன்படி ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவுப் அக்சரின் பாதுகாவலரான இப்ராகிம் இஸ்மாயில் என்ற லம்புவும், அசாரின் மூத்த சகோதரரின் மகனான உமரும் காஷ்மீர் எல்லை வழியாக ஏற்கனவே இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவல் வெளியிட்டு இருக்கிறது.

இதைப்போல பாகிஸ்தானை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் டெல்லியில் ஊடுருவி உள்ளதாகவும் உளவுத்தகவல் கிடைத்துள்ளதாக டெல்லி போலீசார் கூறினர். மேலும் எந்த நேரத்திலும் இந்தியாவுக்குள் நுழைவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயிற்சி முகாம்களில் 600–க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காத்திருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது.

கண்காணிப்பு தீவிரம்

சுதந்திர தினத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கும் தகவல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து பேருந்து, ரெயில், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற பொது இடங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளன. மேலும் சுதந்திர தினவிழாவுக்காக டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story