சுதந்திர தினவிழாவின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது - காஷ்மீர் போலீஸ் அதிரடி


சுதந்திர தினவிழாவின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது - காஷ்மீர் போலீஸ் அதிரடி
x
தினத்தந்தி 6 Aug 2018 10:31 PM GMT (Updated: 6 Aug 2018 10:31 PM GMT)

டெல்லி மற்றும் ஜம்மு நகரங்களில் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் விதமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

ஜம்மு,

நாட்டின் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களின்போது தலைநகர் டெல்லியிலும் பிற முக்கிய நகரங்களிலும் பயங்கரவாதிகள் ஊடுருவி மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் இந்த தாக்குதலை நடத்துவதற்காக பயங்கரவாதிகள் பலர் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் ஜம்முவில் இருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த ஒரு இளைஞரை ஜம்மு காந்திநகர் சோதனைச் சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு மாநில போலீசார் சந்தேகத்தின்பேரில் மடக்கிப் பிடித்தனர். அவரை சோதனையிட்டபோது 8 கையெறி குண்டுகளும், ரூ.60 ஆயிரம் ரொக்கமும் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைதானவர் பெயர் அர்பான் ஹசன்வானி என்பதும், புல்வாமா மாவட்டம், அவந்திபுரா நகர் அருகே உள்ள டான்ஜெர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர், காஷ்மீரில் ஜாகிர் மூசா என்பவர் தலைமையில் இயங்கி வரும் பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்.

இதுபற்றி ஜம்மு ஐ.ஜி. சிங் ஜாம்வால் கூறுகையில், “காஷ்மீரின் குளிர்கால தலைநகர் ஜம்முவில் பயங்கரவாதிகள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் விதமாக தாக்குதல் நடத்தலாம் என்று ஏற்கனவே மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் பயங்கரவாதி ஹசன்வானி கைது செய்யப்பட்டார். இவர் டெல்லிக்கு சென்றிருந்தால் நிச்சயம் சுதந்திர தினவிழாவில் பெரும் நாசவேலையில் ஈடுபட்டு இருப்பார். அவருடைய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது” என்றார்.

கடந்த மாதம் ஜம்மு பஸ்நிலையம் அருகே 3 போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய பயங்கரவாதி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story