மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்: பிரதமர் மோடி உறுதி


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்: பிரதமர் மோடி உறுதி
x
தினத்தந்தி 9 Aug 2018 4:35 PM GMT (Updated: 9 Aug 2018 4:35 PM GMT)

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். #PMmodi #KeralaFlood

புதுடெல்லி,

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார். கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை இன்று திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசினேன். மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த பேரிடர் காலத்தில் கேரள மக்களோடு தோளோடு தோள் நாங்கள் நிற்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story