தேசிய செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு + "||" + The government has refused to allow Rajiv killers to be released

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு
ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டதாக, தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2014–ம் ஆண்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்காலதடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அளித்தனர்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், எனவே இதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016–ம் ஆண்டு கடிதம் எழுதியது.

இந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் 23–ந் தேதி விசாரணைக்கு வந்த போது, 7 பேரையும் விடுவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16–ந் தேதி இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி ஆஜராகி, இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி அனுப்பப்பட்ட மனுவை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 16–ந் தேதி பரிசீலிக்க மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பதாக கூறி, அந்த ஆணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அத்துடன் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளதால் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மத்திய அரசு ஏற்கனவே தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டு இருப்பதால் இந்த வழக்கை முடித்து வைக்கலாம் என்று கூறினார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தங்கள் வாதத்தின் போது, மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதால் தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.



தொடர்புடைய செய்திகள்

1. குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு
குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு வழங்கி உள்ளது.
2. வேலூர் ஜெயில்: 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான கைதி - முதியோர் இல்லத்தில் மனைவியுடன் உருக்கமான சந்திப்பு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவையொட்டி 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான ஆயுள் தண்டனை கைதி, முதியோர் இல்லத்தில் இருந்த தனது மனைவியை சந்தித்தது உருக்கமாக அமைந்தது.
3. ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் - கடலூரில் தொல்.திருமாவளவன்
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்காக கவர்னரை சந்தித்து வலியுறுத்துவோம் என கடலூரில் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்
4. ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன், மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன் மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.
5. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள நவாஸ் ஷெரீப் மற்றும் அவரின் மகளை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.