சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு காங். தலைவர் ராகுல் காந்தி இரங்கல்


சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு காங். தலைவர் ராகுல் காந்தி  இரங்கல்
x
தினத்தந்தி 13 Aug 2018 5:43 AM GMT (Updated: 13 Aug 2018 5:57 AM GMT)

சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, காங். தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சபாநாயகராக 2004–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி (வயது 89). சோம்நாத் சட்டர்ஜி சிறுநீரகம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கப்பட்டு இருந்தார். மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.

ஜனாதிபதி இரங்கல்,

சோம்நாத்  சட்டர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ சோம்நாத் சட்டர்ஜி மறைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். சோம்நாத் சட்டர்ஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நலம் விரும்பிகளுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “ முன்னாள் எம்.பியும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி இந்திய அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்கினார். நமது பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர். ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் குரலாக சோம்நாத் சட்டர்ஜி விளங்கினார். அவரது மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். சோம்நாத்சட்டர்ஜியின் குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.  

இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்பட பல்வேறு தேசிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். 

சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற எம்.பி.யாக 10 முறை இருந்த மூத்த அரசியல்வாதி ஆவார். 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story