பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டவரைவு அவசியம் - தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத்


பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டவரைவு அவசியம்  - தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத்
x
தினத்தந்தி 14 Aug 2018 10:01 AM GMT (Updated: 14 Aug 2018 10:01 AM GMT)

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டவரைவு அவசியமானது என தேர்தல் ஆணையர் ஒ.பி. ராவத் கூறியுள்ளார். #OneNationOneElection


புதுடெல்லி,


இந்தியாவில் பாராளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பா.ஜனதா ஆதரிக்கிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சட்ட ஆணையம் ஆய்வு செய்துவருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளிடம் அறிக்கையையும் கேட்டுள்ளது. கடந்த மாதம் இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது பா.ஜனதாவும், காங்கிரசும் விலகிக்கொண்டது. சில எதிர்க்கட்சிகள் இந்நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார். இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்து அரசியலுக்காக கூறப்படுவதாகவே தெரிகிறது என்று குறிப்பிட்டார் அமித்ஷா. இதற்கிடையே 2019-ல் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது 11 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எந்தநேரத்தில் வேண்டுமென்றாலும் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஒ.பி. ராவத், “சில மாநிலங்களில் சட்டசபையின் காலத்தை குறைக்கவேண்டும், சில மாநிலங்களில் அதனை அதிகரிக்க வேண்டும். பின்னர் இவ்விவகாரத்தில் அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமானது. விவிபிஏடியுடன் 100 சதவித வாக்குப்பதிவு இயந்திரங்கள் அவசியமானது. இதேபோன்று கூடுதல் போலீஸ் படைகள் மற்றும் தேர்தல் பணியாளர்களும் தேவைப்படும்,” என்று கூறியுள்ளார். 

மாநிலங்களில் சட்டசபையின் காலம் முடியும்போது தேர்தல் ஆணையம் வழக்கம்போல் தன்னுடைய பொறுப்புகளை செய்யும் எனவும் குறிப்பிட்டார். 


Next Story