நக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டை, குண்டு வெடிப்புக்கு இடையே, சத்தீஷ்கார் முதல் கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு


நக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டை, குண்டு வெடிப்புக்கு இடையே, சத்தீஷ்கார் முதல் கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 Nov 2018 11:15 PM GMT (Updated: 12 Nov 2018 8:12 PM GMT)

நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டை மற்றும் குண்டு வெடிப்புக்கு இடையே சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் ராமன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அதன் பதவிக்காலம் முடிந்ததால், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுடன் சத்தீஷ்காரிலும் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

90 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், முதல்கட்டமாக நேற்று 18 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. மீதி 72 தொகுதிகளில், வருகிற 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 11-ந் தேதி நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தல் நடந்த 18 தொகுதிகளும், நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த 8 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அங்கு 1¼ லட்சம் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல்-மந்திரி ராமன்சிங் உள்பட 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 ஆயிரத்து 336 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 19 ஆயிரத்து 79 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 10 தொகுதிகளில், பலத்த பாதுகாப்புடன், காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தது. மற்ற 8 தொகுதிகளில், காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி ஓட்டுப்பதிவு முடிவடைந்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 31 ஓட்டுப்பதிவு எந்திரங்களும், 51 ஒப்புகைச்சீட்டு எந்திரங்களும் மாற்றப்பட்டன.

சுக்மா மாவட்டம் பலம் அட்கு கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டுப்பதிவு நடந்தது. 44 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். பல இடங்களில், 100 வயதை கடந்த முதிய வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகளும் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். சுக்மா மாவட்டத்தில், நக்சலைட்டுகளின் எச்சரிக்கையை மீறி, அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர்களும் ஓட்டு போட வந்ததாக அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் மீனா தெரிவித்தார்.

இந்த முதல்கட்ட தேர்தலில், மொத்தம் 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

ஓட்டுப்பதிவு நாளில், நக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டையும் நடந்தது. பிஜப்பூர் மாவட்டம் பாமட் கிராமத்தில் 2 இடங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோ பிரிவினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர்.

தண்டேவாடா மாவட்டம் கதேகல்யாண் பகுதியில் நக்சலைட்டுகள் குண்டு வெடிக்கச் செய்தனர். நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


Next Story