தேசிய செய்திகள்

எல்லா வயது பெண்களையும் அனுமதிக்கும் சபரிமலை தீர்ப்புக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு + "||" + The Supreme Court has refused to ban Sabarimala judgment allowing women of all ages

எல்லா வயது பெண்களையும் அனுமதிக்கும் சபரிமலை தீர்ப்புக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு

எல்லா வயது பெண்களையும் அனுமதிக்கும் சபரிமலை தீர்ப்புக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடும் என்று மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்தார்.

புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28–ந் தேதி அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கேரள அரசு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதால் இதை எதிர்த்து மாநிலத்தில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த தீர்ப்புக்கு எதிராக 48 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை நேற்று முன்தினம் பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வருகிற ஜனவரி மாதம் 22–ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று அறிவித்தது. மேலும் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவும் மறுத்தது.

இதற்கிடையே, பிரபல வக்கீல் மேத்யூஸ் ஜே.நெடும்பரா, தேசிய அய்யப்ப பக்தர்கள்(பெண்கள்) சங்கத்தின் சார்பில் மறு ஆய்வு மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். அதில் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நெடும்பரா தனது மனு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, சபரிமலையில் பெண்களை அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று மீண்டும் மறுத்தது. அனைத்து மறு ஆய்வு மனுக்கள் மீதும் ஜனவரி 22–ந் தேதி விசாரணை நடைபெறும். அதுவரை நீங்கள்(நெடும்பரா) பொறுத்திருக்கவேண்டும் எனவும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

இந்த நிலையில், மத்திய கலாசார மந்திரி மகேஷ் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சபரிமலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு முழுமையாக அதை அணுகவேண்டும். இதனால் யாருடைய மனதும் காயம் அடையக் கூடாது’’ என்றார்.

இப்பிரச்சினையில், நிலைமைக்கு ஏற்ப அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘இதுபற்றி கேரள அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேவைப்படும் பட்சத்தில் உரிய நேரத்தில் இதில் மத்திய அரசு தலையிடும்’’ என்றும் தெரிவித்தார்.


ஆசிரியரின் தேர்வுகள்...