தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் - தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்


தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் - தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 8:03 PM GMT)

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

‘தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும்’ என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார்.

மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு 28-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று ஆய்வு செய்தார். போபாலில் நடைபெற்ற ஆய்வின் இடையே, ‘தந்தி டி.வி’.க்கு அவர் பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அவரிடம், தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்? என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஓ.பி. ராவத், “திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அந்த தீர்ப்பு வெளியானவுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும்” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? அல்லது அதற்கு முன்பாகவே நடைபெறுமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஓ.பி.ராவத், “திருவாரூர் தொகுதி காலியானதில் இருந்து 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டி இருப்பதாலும், 20 தொகுதிகளுக்கும் ஒன்றாக இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும்” என்று பதில் அளித்தார்.

கடந்த முறை இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து அவர் கூறும்போது, “புயல் எச்சரிக்கை காரணமாகவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை வேறு விதமாக விமர்சித்தன.

குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்று தவறான குற்றச்சாட்டை முன்வைத்தனர். தற்போது ‘கஜா’ புயல் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, தேர்தல் கமிஷன் எடுக்கும் முடிவின் மீது அனைத்து தரப்பினரும் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.


Next Story