மேகதாது அணை விவகாரம் : கர்நாடகத்தின் திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு


மேகதாது அணை விவகாரம் : கர்நாடகத்தின் திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 12:00 AM GMT (Updated: 12 Dec 2018 11:39 PM GMT)

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

புதுடெல்லி, 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடிக்கு அணை கட்ட கர்நாடக அரசு 2013–ம் ஆண்டு முடிவு செய்தது.

இந்த அணை கட்டுவதற்கான வரைவு திட்டம் ஒன்றை கர்நாடக அரசு தயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்து அணை கட்ட அனுமதியும் கோரியது. இதற்கு மறைந்த, அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இத்திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது.

கடந்த ஜூலை மாதம் கர்நாடக அரசு சார்பில் மீண்டும் இதே திட்டத்தை செயல்படுத்தும் விதமாக சாத்தியக்கூறு அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு கடந்த மாதம் 22–ந்தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்து விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே மற்றும் ஜி.உமாபதி ஆகியோர் வாதிட்டதாவது:–

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை மீறும் வகையிலும் மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கைக்கு அனுமதி அளித்து இது தொடர்பாக வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் கடந்த 22–ந்தேதி வெளியிட்ட உத்தரவையும் வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

கர்நாடக அரசு மற்றும் காவிரி நீரவாரி நிகம் நிறுவனம் ஆகியோர் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைக்கும் புதிய அணை கட்டும் முயற்சிக்கும் தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இதைத் தொடர்ந்து கர்நாடகா தரப்பில் ஆஜரான அந்த மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் உதய ஹொல்லா தன்னுடைய வாதத்தில், ‘‘மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்கியது அணைக்கான அனுமதி அல்ல. பல்வேறு கட்ட நிபந்தனைகளுடன் சாத்தியக்கூறு அறிக்கைக்கு மட்டுமே ஒப்புதல் அளித்து இருக்கிறது. மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த திட்டத்துக்கான செயல் திட்ட வரைவினை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை தமிழக அரசு எதிர்ப்பதை ஏற்க முடியாது’’ என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள், ஏன் சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதலை பெற்று மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிக்கக் கூடாது? அதேபோல மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதல் பெற்று ஏன் திட்டம் தொடர்பான அனுமதிகளை வழங்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் தற்போதைக்கு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதற்கான ஒப்புதல் மட்டுமே அளிக்கப்பட்டு இருப்பதால் இந்த வி‌ஷயத்தில் தடை எதுவும் விதிக்க தேவை இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கர்நாடகா அரசுக்கு மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதி தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கும் கர்நாடகா அரசுக்கும் உத்தரவிட்டனர்.

அதேநேரத்தில் புதுச்சேரி அரசும் தங்கள் கருத்தை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முழுநேர தலைவரை நியமிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவும் இதே மனுவுடன் இணைக்கப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் இது தொடர்பாக மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசுக்கு, எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு மனுவை விசாரணைக்கு உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தற்போதைய மனுக்களுடன் இணைத்து 4 வாரத்துக்குப் பிறகு இதை விசாரிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story