நாடாளுமன்றத்தில் ‘முத்தலாக்’ முறைக்கு எதிராக புதிய மசோதா அறிமுகம் - காங்கிரஸ் எதிர்ப்பு


நாடாளுமன்றத்தில் ‘முத்தலாக்’ முறைக்கு எதிராக புதிய மசோதா அறிமுகம் - காங்கிரஸ் எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 11:30 PM GMT (Updated: 17 Dec 2018 9:02 PM GMT)

நாடாளுமன்றத்தில் ‘முத்தலாக்’ முறைக்கு எதிராக புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ‘முத்தலாக்’ முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும், இதன்மூலம் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்டமசோதா சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது. இதில் மத்திய அரசு, விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் வழங்குவது உள்பட சில திருத்தங்களை செய்தது. ஆனாலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக திருத்தங்களையும் சேர்த்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவை சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், விவாகரத்து செய்வது தண்டனைக்குரிய குற்றமல்ல. இதன் விதிகள் அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு மாறானதாக உள்ளன. இந்த சட்டமசோதாவே தவறானது. இது மதரீதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீதான நடவடிக்கையாக உள்ளது. இதுபோன்ற ஒரு சட்டத்தை இயற்ற நாடாளுமன்றம் தகுதியானதாக நான் கருதவில்லை என்றார்.

இதற்கு பதில் அளித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

உறுப்பினர்களின் ஆட்சேபனைகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்தே புதிய சட்டமசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ‘முத்தலாக்’ முறையினால் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்களுக்கு உதவுவதற்கு இந்த சட்டம் அவசியம். இதில் குற்றம்சாட்டப்படுபவர் விசாரணைக்கு முன்பே ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுக முடியும்.

இந்த வழக்கில் கணவர், மனைவிக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக்கொண்ட உடனே மாஜிஸ்திரேட்டு அவருக்கு ஜாமீன் வழங்க முடியும். நஷ்டஈடு எவ்வளவு என்பதை மாஜிஸ்திரேட்டு முடிவு செய்வார். மனைவியோ அல்லது அவரது ரத்தசம்பந்தமான உறவினர்களோ, திருமணத்தின் மூலம் உறவினர் ஆனவர்களோ போலீசில் புகார் செய்தால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். மற்றவர்களோ, பக்கத்தில் வசிப்பவர்களோ புகார் செய்ய முடியாது.

இந்த பிரச்சினை தொடர்பாக மனைவி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகினால், கணவன்-மனைவிக்கு இடையேயான பிரச்சினையை தீர்த்துவைக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது. இருதரப்பினரும் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளவும் உரிமை உள்ளது. பாதிக்கப்படும் மனைவி தனக்கும், தன் சிறுவயது பிள்ளைகளுக்கும் பிழைப்பூதியம் கேட்டும் மாஜிஸ்திரேட்டை அணுகலாம். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

இந்த சட்டம் திருமணமான முஸ்லிம் பெண்களுக்கு பாலின நீதி அல்லது பாலின சமத்துவம் என்ற அடிப்படை உரிமைகள் கிடைக்க உதவும் என்று சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், 2017 ஜனவரி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை 430 ‘முத்தலாக்’ சம்பவங்கள் குறித்து ஊடகங்கள் வழியாக அரசுக்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் நேற்றும் காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்குதேசம் ஆகிய கட்சி எம்.பி.க்கள் அவையின் மைய பகுதியில் கூடி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி காங்கிரசும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்குதேசமும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வும் போராட்டம் நடத்தின.

பதிலுக்கு பா.ஜனதா எம்.பி.க்கள், ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூச்சல் போட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 3 முறை ஒத்திவைத்தார். இறுதியாக திருநங்கைகள் தொடர்பான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதும் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் கஜா புயல் பாதிப்பு, மேகதாது, ரபேல் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பினார்கள். இதனால் மேலவை தலைவர் வெங்கையா நாயுடு நாள் முழுவதும் மாநிலங்களவையை ஒத்திவைத்தார்.


Next Story