சபரிமலை விவகாரம்: கேரளாவில் வன்முறை நீடிப்பு


சபரிமலை விவகாரம்: கேரளாவில் வன்முறை நீடிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2019 10:30 PM GMT (Updated: 6 Jan 2019 8:35 PM GMT)

சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

கண்ணூர்,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதில் அரசியல் தலைவர்களின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா தலைவர்களின் வீடுகள் மாறி மாறி தாக்கப்படுவதால் பதற்றம் நீடித்து வருகிறது.

தலசேரி மண்டல பா.ஜனதா இளைஞரணி தலைவர் ரிதிலின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களால் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவரது வீட்டிலுள்ள சில பொருட்கள் சேதமடைந்தன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைப்போல தலசேரில் பா.ஜனதா கொடிக்கம்பம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களின் ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதாவினர் கல்வீச்சு நடத்தினர். இதில் 2 பெண்கள் காயமடைந்தனர். இதைப்போல பா.ஜனதா தலைவர் ஒருவரின் வாகனமும் சேதமடைந்தது.

முன்னதாக மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த கலெக்டர் மிர் முகமது அலி, அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்த இன்று (திங்கட்கிழமை) வரை எந்தவித போராட்டங்களும் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும் மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் தலசேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை போலீசார் ‘144’ தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

இதைப்போல மாநிலத்தின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகாவும், அதனால் அந்த பகுதிகளில் பதற்றம் நிலவுவதாகவும் கேரளாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கேரளாவில் நாத்திகத்தை பரப்ப இடதுசாரி அரசு திட்டமிட்டு செயல்படுவதாக நாயர் சேவை சமூகம் (என்.எஸ்.எஸ்.) குற்றம் சாட்டி உள்ளது. எந்த மதத்தின் நம்பிக்கையும் பாதுகாக்கப்படுவதே மனித குலத்துக்கு அவசியமானது எனக் கூறியுள்ள அந்த அமைப்பின் செயலாளர் சுகுமாரன், இந்த நம்பிக்கையை யாரும் சீர் குலைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.




Next Story