தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க மேலும் 4 மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க மேலும் 4 மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Feb 2019 11:15 PM GMT (Updated: 11 Feb 2019 10:18 PM GMT)

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி, 

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி, அனைத்து மாநிலங்களும் ஓராண்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தவில்லை.

இந்த மாநிலங்கள் உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ உத்தரவிடக்கோரி அஸ்வினி உபாத்தியாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதைப்போல திருச்சியை சேர்ந்த குருநாதன் என்ற சமூக சேவகரும் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை உடனே தொடங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 9-ந் தேதி தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இது தொடர்பான பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த தமிழக அரசு, லோக் ஆயுக்தா அமைக்க 2 மாதம் அவகாசம் கேட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2 மாதத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

எனினும் 2 மாதத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.

பின்னர் அக்டோபர் 24-ந் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், லோக் ஆயுக்தா உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இன்னும் 3 மாதம் கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.

இதை ஏற்று தமிழகத்துக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், பிப்ரவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு உரிய பணிகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வருகின்றன. தேடுதல் குழுவின் பணி முடிவடைந்த பிறகு, தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு லோக் ஆயுக்தா தமிழ்நாட்டில் உருவாக்கப்படும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். இந்த குறிப்பிட்ட காலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் தங்கள் உத்தரவில் அவர்கள் கூறினர்.


Next Story