திருமலையில் 15 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி - தேர்தல் அதிகாரி தகவல்


திருமலையில் 15 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி - தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 17 March 2019 1:59 AM IST (Updated: 17 March 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

திருமலையில் 15 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி அளித்துள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமலை,

ஆந்திர மாநிலத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. திருமலையில் ஏழுமலையான் கோவில் உள்பட புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரம் போன்ற அரசு விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பல்வேறு கட்சிகள் சார்பில் தேர்தல் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் திருப்பதி நகர தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருப்பதி தேர்தல் அதிகாரி விஜயராமராஜூ கலந்து கொண்டு பேசுகையில், “திருமலை நகரில் தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது கட்சி கொடிகளை நடுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. கட்சி தொண்டர்கள், தலைவர்கள் வீடு, வீடாக சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளலாம்” என்றார்.

இதைத்தொடர்ந்து திருமலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story