உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 15 பேர் காயம்


உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 15 பேர் காயம்
x
தினத்தந்தி 20 April 2019 9:51 PM GMT (Updated: 20 April 2019 9:51 PM GMT)

உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

கான்பூர்,

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லிக்கு பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஹவுராவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. இதில் சுமார் 900 பயணிகள் இருந்தனர். ரெயில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ரூமா ரெயில் நிலைய பகுதியில் நள்ளிரவு 12.50 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ரெயிலின் 12 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள், மீட்பு குழுவினர் மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்த 15 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரண மாக அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயிலில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் கான்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்க உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தினார். இந்த விபத்தால் 16 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 28 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. விபத்துபற்றி ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story