நாடாளுமன்றத்தில் காங்கிரசின் 52 எம்.பி.க்களும் பா.ஜனதாவை வலுவாக எதிர்ப்பார்கள் - ராகுல் காந்தி உறுதி


நாடாளுமன்றத்தில் காங்கிரசின் 52 எம்.பி.க்களும் பா.ஜனதாவை வலுவாக எதிர்ப்பார்கள் - ராகுல் காந்தி உறுதி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் , காங்கிரசின் 52 எம்.பி.க்களும் வலுவாக எதிர்ப்பார்கள் என்றும் ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த புதிய எம்.பி.க்களின் கூட்டம் நேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. கட்சியின் மாநிலங்களவை மற்றும் காரியக்கமிட்டி உறுப்பினர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த கூட்டத்தில் கட்சித்தலைவர் ராகுல் காந்தி சிறப்புரையாற்றினார். அப்போது புதிய உறுப்பினர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி உத்வேகம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் (எம்.பி.க்கள்) ஒரு மிகச்சிறந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறீர்கள். தாங்கள் உண்மையில் யாரை எதிர்த்து வெற்றி பெற்று இருக்கிறோம் என்பதை இந்த தேர்தலில் வென்ற நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக இல்லாமல் ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் போராடி வென்றவர்கள் நீங்களாகத்தான் இருக்க முடியும்.

நாம் 52 உறுப்பினர்கள் இருக்கிறோம். இந்த 52 பேருக்கு எதிராக எந்த அமைப்புகள் நின்றாலும் கவலையில்லை. யார் நின்றாலும் பிரச்சினை இல்லை. இந்த 52 உறுப்பினர்களும் பா.ஜனதாவை ஒவ்வொரு அங்குலத்திலும் எதிர்ப்பார்கள் என உறுதியளிக்கிறேன். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கடந்த முறை நமக்கு 5 நிமிடங்களை சபாநாயகர் ஒதுக்கி இருந்தால், இந்த முறை வெறும் 2 நிமிடங்கள் கூட தரலாம். அந்த 2 நிமிடங்களிலும் காங்கிரசின் நம்பிக்கையை, அரசியல் சாசன பாதுகாப்பை நாம் உறுதியாக எடுத்து வைக்க வேண்டும்.

ஆங்கிலேயர் கால இந்தியாவை போன்ற சூழல்தான் தற்போது நிலவுகிறது. அப்போது எந்த ஒரு நிறுவனமும் காங்கிரஸ் கட்சிக்கு உதவவில்லை. ஆனால் அப்போது போராடி வென்றது போல தற்போதும் நாம் போராடி வெற்றி பெறுவோம். ஒரு பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் அச்சமின்றி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தனது கடமையை செய்யும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

பின்னர் அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 52 எம்.பி.க்கள் மட்டும் கிடைத்திருக்கலாம். ஆனால் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாப்பதற்காக, நாங்கள் அனைவரும் இணைந்து துணிச்சல் மிக்க சிங்கங்களாக அச்சமின்றி எங்கள் கடமையை நிறைவேற்றுவோம். நாடாளுமன்றத்தில் பா.ஜனதா எளிதில் வெற்றி பெற முடியாது’ என்று கூறியிருந்தார்.


Next Story