குடகில் தொடர்மழை எதிரொலி: கர்நாடகா காவிரியில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்


குடகில் தொடர்மழை எதிரொலி: கர்நாடகா காவிரியில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 7 July 2019 2:50 AM IST (Updated: 7 July 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

குடகில் தொடர்மழை எதிரொலியாக, கர்நாடகா காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

குடகு,

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தின் மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை உள்பட பல பகுதிகளில் நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி ஆற்றின் பிறப்பிடமான மடிகேரியில், காவிரியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் பாகமண்டலா பகுதியில் உள்ள பாகமண்டலேஸ்வரா கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாகமண்டலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரத்தில் வசித்து வரும் மக்களை வீட்டைவிட்டு வெளியேறும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே மடிகேரியில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

முக்கொட்லுவில் கனமழையால் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

Next Story