டிரம்ப் கருத்தில் மோடி பதில் அளிக்க கோரி மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு - ராஜ்நாத் சிங் விளக்கம்


டிரம்ப் கருத்தில் மோடி பதில் அளிக்க கோரி மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு - ராஜ்நாத் சிங் விளக்கம்
x
தினத்தந்தி 24 July 2019 11:00 PM GMT (Updated: 24 July 2019 10:17 PM GMT)

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான டிரம்ப் கருத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசினார்.

புதுடெல்லி,

ஜப்பானின் ஒசாகா நகரில், ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் மோடி என்னை சந்தித்தபோது, பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.

இது நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு வழிவகுத்தது. வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். டிரம்பை சந்தித்தபோது பாகிஸ்தானுடனான காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் கேட்கவில்லை என கூறினார்.

மக்களவை நேற்று வழக்கம்போல கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை எடுத்துக்கொண்டார்.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, டிரம்ப் வெளியிட்ட கருத்து பற்றி பிரதமர் மோடி சபைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து 2-வது நாளாக முழங்கி அமளியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா வாய்ப்பு அளித்தார். அப்போது அவர், “டிரம்பிடம் பேசியது என்ன என்பது பிரதமர் வாயில் இருந்து வர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது? பிரதமர் வர வேண்டும். விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சொன்னார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “சிம்லா உடன்படிக்கையின்படி காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை; மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தம் ஏற்பதற்கு இல்லை. ஆனால் பிரதமர் மத்தியஸ்தம் செய்யுமாறு கூறியதாக டிரம்ப் தெரிவித்ததாக பார்க்கிறோம். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். அமெரிக்க ஜனாதிபதியும் சரி, பிரதமரும் சரி மறுக்கவில்லை. ஆனால் பிரதமர் பிரதிநிதிகள் மூலம் பதில் தருகிறார்” என்று கூறினார்.

மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, “இது ஒரு வினோதமான சூழ்நிலையாக அமைந்திருக்கிறது. பிரதமர் சபைக்கு வருவதற்கே எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்க வேண்டியதிருக்கிறது” என்றார்.

தொடர் அமளிக்கு மத்தியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளிக்க எழுந்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் பதில் அளிக்க கோரியும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதைத் தொடர்ந்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த சந்திப்பின்போது காஷ்மீர் பிரச்சினை விவாதிக்கப்படவில்லை. காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

ஒசாகாவில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின்போது டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்பின்போது வெளியுறவு மந்திரியும் சங்கர் உடனிருந்தார். எனவே இந்த விவகாரத்தில் அவருடைய விளக்கம், முற்றிலும் உண்மையானது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story