கர்நாடகத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மேலும் 14 பேர் தகுதி நீக்கம்


கர்நாடகத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மேலும் 14 பேர் தகுதி நீக்கம்
x
தினத்தந்தி 29 July 2019 12:15 AM GMT (Updated: 29 July 2019 12:37 AM GMT)

கர்நாடகத்தில் மேலும் 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் நேற்று அதிரடியாக தகுதிநீக்கம் செய்தார். இதனால் சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா எளிதில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கடந்த 22-ந் தேதி கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க் களை தகுதிநீக்கம் செய்யுமாறு கோரி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் சார்பில் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

அதை பரிசீலித்த சபாநாயகர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமட்டள்ளி, சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரசில் சேர்ந்த சங்கர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் கடந்த 25-ந் தேதி தகுதி நீக்கம் செய்தார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கர்நாடகத்தில் புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதா முன்வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா 26-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

அப்போது, வருகிற 31-ந் தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு அவருக்கு கவர்னர் வஜூபாய் வாலா ‘கெடு’ விதித்தார். ஆனால் 29-ந் தேதியே சட்டசபையில் தான் மெஜாரிட்டியை நிரூபிக்கப்போவதாக பின்னர் எடியூரப்பா அறிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 11 எம்.எல்.ஏ.க்களையும், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் ரமேஷ்குமார் நேற்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விவரம் வருமாறு:-

1. பிரதாப் கவுடா பட்டீல்

2. பி.சி.பட்டீல்

3. சிவராம் ஹெப்பார்

4. எஸ்.டி.சோமசேகர்

5. பைரதி பசவராஜ்

6. ஆனந்த் சிங்

7. ஆர்.ரோஷன் பெய்க்

8. எஸ்.முனிரத்னா

9. கே.சுதாகர்

10. எம்.டி.பி.நாகராஜ்

11. ஸ்ரீமந்த் பட்டீல்

இவர்கள் அனைவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவர்களில் ஸ்ரீமந்த் பட்டீல் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்ற போதிலும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

1. கே.கோபாலய்யா

2. எச்.விஸ்வநாத்

3. கே.சி.நாராயண கவுடா

இவர்கள் மூவரும் ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இவர்களையும் சேர்த்து மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து இருக்கிறார். 
14 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் தெரிவித்த சபாநாயகர் ரமேஷ்குமார், பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக மாறிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. என்.மகேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சி புகார் அளித்து இருப்பதாகவும், அதுபற்றி விசாரித்து வருவதாகவும் கூறினார்.

கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி, தற்போதைய 15-வது கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் 2023-ம் ஆண்டு வரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் தேர்தலில் போட்டியிட முடியாது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து இருப்பதை முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சித்தராமையா வரவேற்று உள்ளார்.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, முதல்-மந்திரி எடியூரப்பா சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதற்காக காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது.

கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 224. இவர்களில் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதால், தற்போது சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 207.

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு குறைந்தபட்சம் 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் சுயேச்சை உறுப்பினர் களின் ஆதரவு இருப்பதால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பாரதீய ஜனதா எம்.எல். ஏ.க்கள் அனைவரும் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் நேற்று மாலை எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்று 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருப்பதாக எடியூரப்பா நிருபர்களிடம் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதையொட்டி, பெங்களூருவில் உள்ள விதானசவுதாவை சுற்றிலும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பிரதாப் கவுடா நேற்று நிருபர்களிடம் பேசுகையில், சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து 14 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார். தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

இதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத்தும் இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டை அணுக இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, ஏற்கனவே கடந்த 25-ந் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களான ரமேஷ் ஜார்கிகோளி போட்டியிட்டு வெற்றி பெற்ற பெலகாவி, மகேஷ் குமட்டள்ளி வெற்றி பெற்ற அதானி, சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்ட ராணிபென்னூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் காலியாக இருப்பதாக கர்நாடக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.


Next Story