தேசிய செய்திகள்

காஷ்மீரில் மேலும் சில நாட்கள் நீடிக்கும்: ஜம்முவில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம் - போலீஸ் உயர் அதிகாரி தகவல் + "||" + There will be a few more days in Kashmir: Removal of all restrictions in Jammu - Police High Officer Information

காஷ்மீரில் மேலும் சில நாட்கள் நீடிக்கும்: ஜம்முவில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம் - போலீஸ் உயர் அதிகாரி தகவல்

காஷ்மீரில் மேலும் சில நாட்கள் நீடிக்கும்: ஜம்முவில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம் - போலீஸ் உயர் அதிகாரி தகவல்
ஜம்முவில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதாகவும், காஷ்மீரில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் சில நாட்கள் நீடிக்கும் எனவும் மாநில போலீஸ் ஏ.டி.ஜி.பி. கூறினார்.
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி ஊரடங்கு, 144 தடை உத்தரவு, தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிப்பு என கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


கடந்த 5-ந்தேதி முதல் இத்தகைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், பல இடங்களில் தற்போது நிலைமை மேம்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர், கள நிலவரத்தை பொறுத்து இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மாநில போலீஸ் ஏ.டி.ஜி.பி. முனிர் கான் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு பிராந்தியத்தில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்பட்டன. அங்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல செயல்படுகின்றன.

ஆனால் காஷ்மீரில் மட்டும் சில பகுதிகளில் சில நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர் மற்றும் சில மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால் அவை அனைத்தும் உள்ளூர் மட்டத்திலேயே தீர்க்கப்பட்டன.

மாநிலத்தின் எந்த பகுதிகளிலும் யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ரப்பர் குண்டுகளால் ஒரு சிலருக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டன. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுப்பதே எங்களின் மிகப்பெரிய பணி ஆகும்.

இதுபோன்ற மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு அச்சுறுத்தல் நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விதமான கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இயல்புதான். அந்தவகையில்தான் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவோர் என கருதப்படுபவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுகின்றனர்.

தற்போதைய நிலையில் அரசு மற்றும் போலீசாரின் மிகப்பெரிய நோக்கம், நாளை (இன்று) கொண்டாடப்படும் சுதந்திர தினத்தை அமைதியாக கொண்டாட நடவடிக்கை எடுப்பதுதான். மாநிலம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு முனிர் கான் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதன்மை செயலாளர் ரோகித் பன்சால் பேசும்போது குறிப்பிட்டதாவது:-

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக அமைதியான சூழல் நீடிக்கிறது. ஏராளமான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன பொது வினியோகம், தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையம், மருத்துவ வசதிகள் அனைத்திலும் வழக்கமான சூழல் நிலவுகிறது.

உள்ளூர் அதிகாரிகள் வழக்கம் போல நிலைமையை கண்காணித்து வருகின்றனர். தேவையான இடங்களில் அவர்கள் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வருகின்றனர். தங்கள் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்து கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றனர்.

தற்போது எங்குமே பொதுவான கட்டுப்பாடுகள் இல்லை. குறிப்பிட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மட்டுமே அங்கு கட்டுப்பாடுகளை தொடர முடிவு செய்கின்றனர். இல்லையென்றால் அவற்றை அகற்றி விடுகின்றனர். இவ்வாறு ரோகித் பன்சால் தெரிவித்தார்.

இதற்கிடையே ஸ்ரீநகரில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கின்றன. அங்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. முக்கியமான சாலைகளும் ஆங்காங்கே மூடப்பட்டு உள்ளன. அந்த பகுதி முழுவதும் துணை ராணுவ படையினரின் கோட்டையாகவே காட்சி அளிக்கிறது. தொலைபேசி இணைப்புகள், செல்போன் இணைப்புகள், இணையதள வசதிகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, “10 நாட்களாக குழந்தைகள் பள்ளிகளுக்கு போகவில்லை. வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் வேலைக்கு போக முடியவில்லை. இதனால் தினக்கூலிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு மட்டும் மாதச் சம்பளம் கிடைப்பதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை” என்று கூறினார்.

ராணுவ கமாண்டரான ராமன் (வயது 55) என்பவர் கூறும்போது, “24 மணி நேரமும் பணியில் இருப்பதால் தூக்கம் குறைந்து விட்டது. ஓய்வு தான் எடுக்க முடிகிறதே தவிர நீண்டநேர தூக்கம் என்பது கனவாகி விட்டது. இன்னமும் இங்கு உள்ள மக்கள் கற்களை வீசுகின்றனர். இங்கு உள்ளவர்கள் ரப்பர் குண்டுகளுக்கு தான் பயப்படுவதால் பெரும்பாலும் அந்த குண்டுகளை வீசும் துப்பாக்கிகளே பயன்படுத்தப்படுகிறது. இங்கு பணி புரிவது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கிறது” என்றார்.

காஷ்மீரில் அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகளுக்கு பின் முதல்முறையாக இன்று (வியாழக்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக அரசு தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் காஷ்மீரின் தால் ஏரியிலும் போலீசார் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.