மத்திய அரசிடம் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறது காங்கிரஸ்


மத்திய அரசிடம் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறது காங்கிரஸ்
x
தினத்தந்தி 27 Aug 2019 2:13 PM GMT (Updated: 27 Aug 2019 2:13 PM GMT)

மத்திய அரசிடம் பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் வெள்ளை அறிக்கையை கேட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை மற்றும் உபரி இருப்புத்தொகையை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக்குழு, ரிசர்வ் வங்கிக்கு ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தது. இதை ரிசர்வ் வங்கி வாரியம் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசுக்கு ரூ.1,76,051 கோடியை வழங்க மத்திய வங்கியின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதில் ரூ.1,23,414 கோடி 2018–19–ம் ஆண்டுக்கான உபரி இருப்புத்தொகை ஆகும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

 இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில்,  தேசம் ஆழமான நிதி சிக்கலில் சிக்கி , பொருளாதாரம் உருக்குலைந்து இருக்கிறது. வளர்ச்சி குறித்து குறிப்பிடும் அனைத்து குறியீடுகளும் குறைந்த நிலையிலே உள்ளது. தேசத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தியும் (ஜிடிபி) தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆசியாவில் மிகமோசமாக சரிந்துவரும் கரன்சியாக இந்திய ரூபாய் இருக்கிறது. 

வேலையின்மை நிலவரமும் மோசமான நிலையில் உள்ளது. தொழில்துறை, ஆட்டோமொபைல் துறை உள்ளிட்ட பலதுறைகள் ஆபத்தில் இருக்கிறது. வங்கிகளில் மக்களுக்கு கடன் கிடைக்கவில்லை, இதனால் தேவை படிப்படியாக குறைந்து வருகிறது. 

இப்போது நிலைமையை சமாளிக்க ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதியை, அதாவது உபரி நிதி மத்திய அரசுக்கு தரப்படுகிறது. எந்த ரிசர்வ் வங்கியும் எதிர்பாராத பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வைத்திருக்கும் இந்த பணத்தை மத்திய அரசுக்கு அளிக்காது. 

இப்போது ரிசர்வ் வங்கி பணத்தை அளிக்க முன்வந்துள்ளதன் மூலம் தேசம் பெரும் பொருளாதார மற்றும் நிதி சிக்கலில் இருப்பது உறுதியாகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டுக்கும், பொருளாதார ஆய்வு அறிக்கைக்கும் இடையே ரூ.1.7 லட்சம் கோடி வேறுபாடு இருக்கிறது. எனவே, ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்று, தேசத்தை பொருளாதார அவசரநிலைக்கு தள்ளுகிறது. இவை அனைத்தும் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதால் வந்துள்ள விளைவாகும். தேசத்தின் பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்து மத்திய அரசு ஒருவாரத்திற்குள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறியுள்ளார். 

Next Story