காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் முதல் பயங்கரவாத தாக்குதல்; அப்பாவி மக்கள் 2 பேர் கடத்திக்கொலை - பயங்கரவாதிகள் வெறியாட்டம்


காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் முதல் பயங்கரவாத தாக்குதல்; அப்பாவி மக்கள் 2 பேர் கடத்திக்கொலை - பயங்கரவாதிகள் வெறியாட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2019 2:27 PM GMT (Updated: 27 Aug 2019 10:50 PM GMT)

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் முதல் முறையாக அப்பாவி மக்கள் 2 பேர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் வெறியாட்டத்தில் பலியான அவர் களது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன.

காஷ்மீர் மாநிலம், எல்லை தாண்டிவரும் பயங்கரவாதிகளின் எளிய இலக்காக இருந்து வந்தது. அதை முடிவுக்கு கொண்டு வரவும், ஒரே நாடு ஒரே அரசியல் சாசனம், ஒரே நாடு ஒரே கொடி என்பதை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

அந்த வகையில், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ந் தேதி ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கி தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது, பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்த பாகிஸ்தானுக்கு திருடனுக்கு தேள் கொட்டியதுபோல அமைந்தது.

காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, எந்தவித பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் அங்கு தற்காலிக தங்குமிடத்தில் வசித்து வந்த அப்பாவி மக்களான அப்துல் காதிர் கோலி என்பவரும், அவரது நெருங்கிய உறவினரான மன்சூர் அகமது கோலி என்பவரும் 18-ந் தேதி நள்ளிரவுவாக்கில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்டனர்.

அவர்களின் கதி என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் கடத்திச்சென்ற பயங்கரவாதிகள், அவர்களை சுட்டுக்கொலை செய்து, உடல்களை வீசிச் சென்றது தெரிய வந்துள்ளது.

அப்துல் காதிர் கோலியின் உடல் டிரால் வனப்பகுதியில் உள்ள லிட்சிநாக் என்ற இடத்தில் நேற்று முன்தினமும், மன்சூர் அகமது கோலி உடல் அதே டிரால் வனப்பகுதியில் லாச்சி டாப் பிகாக் பகுதியில் நேற்றும் கண்டு, மீட்கப்பட்டன.

இது அந்தப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வெறியாட்டத்தை நடத்தியது பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் என தகவல்கள் கூறுகின்றன.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த நிலையில் நடந்துள்ள முதல் பயங்கரவாத தாக்குதல் இதுதான் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Next Story