மோடியை புகழ்ந்து பேசிய விவகாரம்: சசி தரூரிடம் விளக்கம் கேட்டது கேரள காங்கிரஸ்


மோடியை புகழ்ந்து பேசிய விவகாரம்: சசி தரூரிடம் விளக்கம் கேட்டது கேரள காங்கிரஸ்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:25 AM GMT (Updated: 28 Aug 2019 3:25 AM GMT)

மோடியை புகழ்ந்து பேசியது குறித்து சசி தரூரிடம் கேரள காங்கிரஸ் விளக்கம் கேட்டது.

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் மூத்த தலைவரும்  திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். சசி தரூர் கூறும் போது,  “பிரதமர் நரேந்திர மோடி நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது பாராட்ட வேண்டும். தவறான திட்டங்களை கொண்டு வரும்போது எதிர்க்க வேண்டும். கண்களை மூடிக் கொண்டு மோடியை எதிர்ப்பது சரியாக இருக்காது” என்றார்.

இதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், சசிதரூரிடம் விளக்கம் கேட்டு கேரள காங்கிரஸ் தலைவர்   முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார். 

இந்த நிலையில், தனது டுவிட்டரில் இவ்விவகாரம் குறித்து பதிவிட்டுள்ள சசி தரூர் கூறியிருப்பதாவது:- மோடி அரசை கடுமையாக விமர்சிப்பவன் நான். ஆக்கப்பூர்வமான முறையை நான் நம்புகிறேன். எனது கருத்தில் உடன்பாடு இல்லை என்றாலும், சக கட்சியினர் எனது அணுகுமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story